தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை..நீதிமன்றம்

மும்முறை தலாக் கூறி விவாகரத்து வழங்கும் உரிமை ஹாஜிகளுக்கு இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்முறை தலாக் கூறி விவாகரத்து வழங்கும் முறையை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்எல்ஏ பதர் சையத் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது 1980ம் ஆண்டு ஹாஜிகளுக்கான சட்டத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமைகள் பற்றி தெளிவாக சொல்லப்பட்டிருப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அந்த விதிகளின்படி தலாக் கூறி விவாகரத்து வழங்க ஹாஜிகளுக்கு உரிமை இல்லை என அவர்கள் கூறினர். தலாக் குறித்து கருத்து மட்டுமே அவர்கள் கூறமுடியும் என்றும், உத்தரவிடமுடியாது என்றும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில் அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஹாஜிகளுக்காக உரிமைகள் குறித்து புதிய சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை வரும் 21ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வழக்கு முடியும் வரை தலாக் சான்றிதழ் வழங்கவும் தடைவிதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முக்கிய செய்திகள்