செய்திகள் உண்மை உடனுக்குடன்

விவசாயத்தில் இறங்கி வியக்க வைக்கும் சகோதரிகள்..!

விவசாயிகளே தங்களது தொழிலை கைவிட்டு பட்டணத்தை நோக்கி படையடுத்து வரும் நிலையில், பட்டப்படிப்பு முடித்த கோவை பெண்கள் இருவர் விவசாயத்தின் மீது ஆர்வம் கொண்டு சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தங்களது விவசாய பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்புவரை, விவசாயத்திற்கு பெயர்பெற்ற மண்தான் கோவை மாவட்டம். நெல், வாழை, மஞ்சள், கரும்பு என இங்கு விளையாத பயிர்களே இல்லை. ஆனால் நகர விரிவாக்கம், ரியல் எஸ்டேட் ஆதிக்கம் போன்ற காரணங்களால் பயிர்சாகுபடி இங்கு படிப்படியாகக் குறைந்து வருகிறது. கடந்த 2005-ஆம் ஆண்டு 2 லட்சத்து 6 ஆயிரம் ஹெக்டேர் என இருந்த விவசாயப் பரப்பளவு தற்போது ஒரு லட்சத்து 43 ஆயிரம் ஹெக்டேராகக் குறைந்துள்ளது.

இந்நிலையில், எம்பிஏ மற்றும் சிவில் எஞ்சினியரிங் பட்டம் பெற்ற மேட்டுப்பாளையம் சம்பரவள்ளிப்புதூர் கிராமத்தை சேர்ந்த சகோதரிகள் காயத்ரிதேவி, பிரியங்கா ஆகியோர் மேற்படிப்பை விட்டு விட்டு விவசாயத்தை கையில் எடுத்துள்ளனர்.

வேறு எந்த பணியை காட்டிலும் கடுமையான உடல் உழைப்பு விவசாயத்திற்கு தேவைப்படும். இதற்காக, அதிகாலையிலேயே எழும் சகோதரிகள், இரு சக்கர வாகனம் மூலம் தங்களது தோட்டத்திற்கு சென்று அங்கு களை பறிப்பது, உரம் தெளிப்பது, நீர் பாய்ச்சுவது என சுட்டெரிக்கும் வெயிலில் அனைத்து பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐடி துறைகளில் தங்கள் பிள்ளைகள் வேலை பார்த்தால் தான் மதிப்பு என கருதும் பல பெற்றோர்களுக்கு மத்தியில், விவசாயத்துறையில் பெண்களும் சாதிக்க வேண்டும் என தனது மகள்களை வாழ்த்தி, அவர்களது விருப்பப்படியே விவசாயம் செய்ய அனுமதி அளித்திருக்கிறார் அவர்களின் தாயார் அருள் மொழி.

இந்த சகோதரிகளைப் போன்று பட்டப்படிப்பு முடித்த இளைஞர்கள் விவசாயத்தை கையில் எடுக்கத் தொடங்கினால் நாடு செழிக்கும் என்பதில் சந்தேகமில்லை.