செய்திகள் உண்மை உடனுக்குடன்

விவசாயிகளுக்கு தனி பட்ஜெட்: பிரஷாந்த் பூஷன் கட்சி திட்டமிடும் போட்டி நாடாளுமன்றம்

Bhushanaa

பட்ஜெட் கூட்டத் தொடரின் போது, டெல்லி ஜந்தர் மந்தரில் போட்டி நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்தி அதில் விவசாயிகளுக்கான தனி பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிரஷாந்த் பூஷனின் ஸ்வராஜ் அபியான் கட்சி திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பாக அந்த கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கூட்டப்படும் ஜனவரி 31ம் தேதி முதல் இந்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அஷூடோஷ் தலைமையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

பட்ஜெட்டில் விவசாயிகளுக்காக இடம்பெற வேண்டிய விஷயங்கள் குறித்தும், மறுக்கப்படும் விஷயங்கள் குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் முதுகெலும்பான விவசாயத்துக்கென தனி பட்ஜெட்டையும் இந்த கூட்டத்தில் தாக்கல் செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பாரதிய உழவர் கூட்டமைப்பு, கன்னட ராஜிய ராயத்து சங்கம், கிசான் சங்கர்ஷ் சமிதி, ராயத்து சுவாராஜ்ய வேதிகே, தேசிய விவசாயிகள் இயக்கக் கூட்டமைப்பு மற்றும் வாழ்க விவசாயிகள் இயக்கம் ஆகிய விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.