கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம்.. இனி அங்கு வளர்ச்சி எப்படி இருக்கும்..

சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்குச் செல்வதற்காக, வண்டலூருக்கு பதிலாக, கூடுவாஞ்சேரியில், புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், வர்த்தக ரீதியிலும் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத்துறையிலும் கூடுவாஞ்சேரி எந்தளவிற்கு வளர்ச்சி அடையும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்துநிலையத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தென்மாவட்டங்களுக்கான பேருந்துநிலையம் வண்டலூரில் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த 2013 ஆம் ஆண்டு சட்டசபையில் தெரிவித்தார். ஆனால், புதிய பேருந்துநிலையம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்துவதில் கடந்த 3 ஆண்டுகளாக சிக்கல் நீடித்ததையடுத்து கூடுவாஞ்சேரியில், நந்திவரம் பகுதியில் தென்மாவட்டங்களுக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுமென தமிழக அரசு அறிவித்துள்ளது. கூடுவாஞ்சேரியில் புதிய பேருந்து நிலையம் அமைவதால் இந்த பகுதியில் தொழில் வளர்ச்சி பெருகுமென வணிகர்கள் மற்றும் தொழில் முனைவோர் தெரிவித்துள்ளனர்.

ரியல் எஸ்டேட் துறையிலும் கட்டுமானத்துறையிலும் தற்போது உள்ளதைவிட இரட்டிப்பு வளர்ச்சி இருக்குமென கட்டுமானத்துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.

கூடுவாஞ்சேரியில் புதிய புறநகர்பேருந்து நிலையம் அமையும் அதே வேளையில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச்சாலை மாற்றப்பட வேண்டும‌ என்பதோடு, புதிய மேம்பாலங்கள், அடுக்குமாடி வாகன நிறுத்தம் ஆகியவையும் இன்றியமையா தேவைகளாகும். இவையெல்லாம் முழுமையாக கிடைக்கப்பெறும்போது தான், புதிய புறநகர் பேருந்து நிலையமாக உருவெடுக்கும் கூடுவாஞ்சேரியின் வளர்ச்சியும் முழுமையடைந்திடும் என்பது, பொதுமக்கள், தொழில் முனைவோரின் கருத்தாக உள்ளது.