செய்திகள் உண்மை உடனுக்குடன்

ட்விட்டரில் கசிந்த பாகுபலி- 2 படத்தின் காட்சிகள்

பாகுபலி 2-ஆம் பாகத்தின் சில காட்சிகள் சமூக வலைதளங்களில் கசிந்துள்ளது.

பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இரண்டாம் பாகம் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. முதல் பாகத்தை விட மிக பிரம்மாண்டமாக 200 கோடி ரூபாய் பொருட்செலவில் இரண்டாவது பாகம் தயாராகி வருகிறது. கிட்டத்தட்ட ரூ.70 கோடி செலவில் படமாக்கப்படும் படத்தின் முக்கியமான போர்க்களக் காட்சி வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். காட்சிகள் கசியவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டன. எனினும் அதற்குள் அக்கட்சிகளை பார்த்த சிலர் அனுஷ்காவின் நடிப்பும், ராஜமௌலியின் இயக்கமும் அருமையாக உள்ளது என்று வெகுவாக பாராட்டியுள்ளனர். இதேபோல் கடந்த வாரம் படபிடிப்பு தளத்தல் இருந்து சில புகைப்படங்கள் வெளியே கசிந்ததால் இயக்குநர் ராஜமௌலி படப்பிடிப்பு முதல் எடிட்டிங் வரை எந்த இடத்திற்கும் குழுவினர் யாரும் செல்போன்களை எடுத்துவரக்கூடாது என்று உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா உள்ளிட்டோர் நடித்து கடந்த ஆண்டு வெளியான பாகுபலி திரைப்படம் உலகமெங்கும் 650 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி, இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களின் வரிசையில் இரண்டாமிடம் பிடித்தது. படத்தின் கதையும் தொழில்நுட்ப நேர்த்தியும் அனைவரையும் வெகுவாக கவர்ந்ததே இதன் வெற்றிக்கு காரணம்.