கபாலியை முந்திய பாகுபலி-2 டிரெய்லர்!

’பாகுபலி’ திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் டிரெய்லர் புதிய சாதனை படைத்துள்ளது. சினிமா ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் ’பாகுபலி’ இரண்டாம் பாகமான, பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின், 2.24 நிமிடங்கள் அடங்கிய டிரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் யூ டியூப்பில் வெளியிடப்பட்ட ஒரே நாளில், சுமார் 2 கோடியே 24 லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர். முதல் எட்டு மணி நேரத்தில் மட்டும் ஒரு கோடியே 20 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இது ரஜினிகாந்த்தின் ’கபாலி’ திரைப்படத்தின் டிரெய்லரை விட அதிகமாகும். தமிழில் வெளியான டிரெய்லரை மட்டும் சுமார் 31 லட்சம் பேர் பார்த்துள்ளனர். ’பாகுபலி’ டிரெய்லர் உலக சாதனை படைத்திருப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள திரைப்படத்தின் இயக்குநர் ராஜமெளலி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிகாரப்பூர்வமாக டிரெய்லர் வெளியிடப்படுவதற்கு முன்பே, சமூக ஊடகங்களில் பாகுபலி டிரெய்லர் கசிந்ததால் அதிகாரப்பூர்வ டிரெய்லர் அவசரமாக வெளியிடப்பட்டது.