24 மணி நேரத்தில் 5 கோடி பேர் பார்த்த 'பாகுபலி-2' டிரெய்லர்!

பாகுபலியின் இரண்டாம் பாகமான பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின் டிரெய்லரை, 24 மணி நேரத்தில் ஐந்து கோடி பேர் பார்த்திருக்கின்றனர்.

இந்திய சினிமாவில், ஒரு திரைப்படத்தின் டிரெய்லரை, ஒரே நாளில் 5 கோடி பார்த்திருப்பது புதிய சாதனையாகும். இதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள பாகுபலி திரைப்படத்தின் இயக்குநர் ராஜமவுலி, ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும், பாகுபலி தி கன்க்ளூசன் திரைப்படத்தின், 2.24 நிமிடங்கள் அடங்கிய டிரெய்லர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் நேற்று வெளியிடப்பட்டது. இதனை யூ டியூப், ஃபேஸ்புக்கில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 கோடி பேருக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

தமிழில் வெளியான டிரெய்லரை மட்டும் சுமார் 32 லட்சம் பேரும், தெலுங்கில் வெளியான டிரெய்லரை சுமார் 24 லட்சம் பேரும், மலையாளத்தில் வெளியான டிரெய்லரை சுமார் 6 லட்சம் பேரும் பார்த்துள்ளனர். அதிகபட்சமாக ஹிந்தியில் வெளியான பாகுபலியின் டிரெய்லரை ஒரு கோடியே 32 லட்சம் பேர் பார்த்து ரசித்துள்ளனர். டுவிட்டரிலும் பாகுபலி படத்தின் டிரெய்லர் வைரலாகியுள்ளது.