பிசியோ பிசியில் ஹீரோக்கள்: வெயிட்டிங்கில் இயக்குனர்கள்

Vanamagan

ஹீரோக்களின் கால்ஷீட் கிடைக்காததால் படம் இயக்க முடியாமல் இயக்குனர்கள் பலர் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அஜீத், விஜய், சூர்யா போன்றோர் வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படம் என்ற நிலையில் நடித்து வருகின்றனர். எப்போதும் பட எண்ணிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்காத விக்ரம், ’துருவ நட்சத்திரம்’, விஜய் சந்தர் இயக்கும் படங்களில் நடிக்கிறார். கார்த்தி, காற்று வெளியிடை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களில் இப்போது நடித்துவருகிறார். இதையடுத்தும் இரண்டு படங்கள் அவர் வரிசையில் இருக்கிறது. ஜெயம் ரவி, வனமகன், டிக் டிக் டிக், சங்கமித்ரா என மூன்று படங்களில் பிசி.

தனுஷ், வேலையில்லா பட்டதாரி 2, எனை நோக்கி பாயும் தோட்டா, வடசென்னை என வரிசையாக படங்களை வைத்திருக்கிறார். சிம்பு, இப்போது, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்துவருகிறார். அடுத்து எந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது பற்றி அறிவிக்கவில்லை.

சிவகார்த்திகேயனும் வருஷத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் நடிக்கலாம் என முடிவெடுத்திருக்கிறார். இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் நடித்துவருகிறார். விஜய் சேதுபதி அடுத்த வருட இறுதிவரை கால்ஷீட்டை ஃபுல்லாக வைத்திருக்கிறார். கவண் படம் முடிந்துவிட்ட நிலையில், விக்ரம் வேதா, கருப்பன், வடசென்னை, அநீதி கதைகள், பிரேம் குமார் இயக்கும் படம் என அடுத்தடுத்து வெயிட்டிங்கில் இருக்கிறது அவருக்கான படங்கள். ’கடம்பன்’படத்தை முடித்துவிட்ட ஆர்யா, அமீரின் ’சந்தனத்தேவன்’படத்தில் நடித்து வருகிறார்.

’நான்’ படம் மூலம் ஹீரோ அவதாரம் எடுத்த இசை அமைப்பாளர் விஜய் ஆண்டனியும் தொடர்ந்து படங்களில் நடித்துவருகிறார். இப்போது அண்ணாதுரை என்ற படத்தில் நடித்துவரும் அவர், அடுத்து கிருத்திகா உதயநிதி, சீமான் இயக்கும் படங்களில் நடிக்க இருக்கிறார் என்பதால் அவர் கால்ஷீட்டும் அடுத்த வருடம் வரை ஃபுல்.

ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷ்குமார், இப்போது சூப்பர் பிசி. அடங்காதே, 4ஜி, ஐங்கரன், நாச்சியார், செம என படங்களை வரிசையாக வைத்திருக்கிறார். விதார்த், விமல், ஆரி, பாபி சிம்ஹா உட்பட மற்ற ஹீரோக்களும் கையில் நான்கைந்து படங்களை வைத்திருப்பதால் ஹீரோக்கள் கிடைக்காமல் இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திண்டாடி வருவதாக, சொல்கிறது கோலிவுட்.