செய்திகள் உண்மை உடனுக்குடன்

3 ஆண்டுகளுக்கு பின் வெளிச்சத்திற்கு வந்த கொலை சம்பவம்

வேலூர் மாவட்டத்தில் தகாத உறவு காரணமாக கணவரின் அண்ணன் மற்றும் மாமனாரை பெண் கொலை செய்தது மூன்று ஆண்டுகளுக்கு பிறகு வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த புன்னை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜிமாஜிகான். கருவாடு விற்பனை செய்யும் தொழில் செய்கிறார். இவரது மனைவி சபீரா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

ஜிமாஜிகானின் அண்ணன் அப்துல்காதர், தந்தை ஷாஜகான், அண்ணனின் மனைவி ரமீஜா ஆகியோர் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தனர். 2014-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்துல்காதர் தூக்கு மாட்டி இறந்தார். அவர் இறந்து 8 மாதங்கள் கழித்து தந்தை ஷாஜகானும் வீட்டு வாசலில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த 2 சம்பவங்கள் குறித்து நெமிலி போலீசில் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் ஜிமாஜிகானுக்கும் அவரது மனைவி சபீராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2 பேரும் பிரிந்தனர்.

சில மாதங்கள் கழித்து மனம் மாறிய சபீரா, ஜிமாஜிகானை சந்தித்து தன்னோடு சேர்ந்து வாழுமாறு கூறி தான் செய்த தவறுகளுக்கு எல்லாம் மன்னிப்பு கோரியுள்ளார். அப்போது ஜிமாஜிகானின் அண்ணனும் தந்தையும் சாதாரணமாக இறக்கவில்லை என்றும் தன்னுடன் தகாத உறவு வைத்திருந்த கிருஷ்ணன் தான் கொன்றார் எனவும் கூறியுள்ளார்.

இதனையடுத்து அதிர்ச்சியடைந்த ஜிமாஜிகான் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.