செய்திகள் உண்மை உடனுக்குடன்

இன்ஸ்பெக்டரே கொலை பண்ண சொல்றாரு! கானா முருகனின் பொளேர் புகார்

திருந்தி வாழ முடிவெடுத்த தன்னிடம், இரண்டு பேரை கொலை செய்ய போலீஸ் இன்ஸ்பெக்டர் வலியுறுத்துவதாக ரவுடி ஒருவர் கூறியிருக்கிறார். மனைவியுடனான கருத்து வேறுபாட்டை மறைக்க, இப்படி தங்கள் மீது புகார் கூறுவதாக, இன்ஸ்பெக்டர் தெரிவித்திருக்கிறார்.

தன்னை பற்றியே ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் இவரது பெயர் கானாமுருகன். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கோனாமேடு பகுதியைச் சேர்ந்தவர். 1998ஆம் ஆண்டு கடை ஒன்றை சேதப்படுத்திய வழக்கில் சிறை செல்ல ஆரம்பித்தவர், சின்னதும், பெரியதுமான வழக்கில், கடந்த 17 ஆண்டுகளாகச் சிறை செல்வதும் பின்னர் திரும்புவதுமாக இருக்கிறார். தற்போது, மனந்திருந்தி வாழ முன்வந்திருக்கிறார் கானா முருகன். குடும்ப பிரச்னைக்காக வாணியம்பாடி காவல் நிலையத்துக்கு சென்ற அவரை, இரண்டு கொலை செய்ய காவல் ஆய்வாளர் தூண்டியதாகக் குற்றம்சாட்டுகிறார்.

கானா முருகனின் புகார் பற்றி, வாணியம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடம் கேட்டபோது, தன் மீதான குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். உண்மைக்கு புறம்பான தகவல்களை கூறிவரும் கானா முருகன் மீது வழக்குத் தொடர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கானாமுருகனோடு சேர்ந்து வாழ அவரது மனைவி அச்சப்படுவதாக கூறினார்.