செய்திகள் உண்மை உடனுக்குடன்

அஞ்சல் அலுவலக ஊழியர் தேர்வில் முறைகேடு: மாணவர்கள் புகார்

தமிழகத்தில் நடைபெற்ற அஞ்சல் அலுவலக ஊழியர்களுக்கான தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

சென்னை மண்டலத்தில் 21 காலிப்பணியிடங்களுக்கு நடைபெற்ற அஞ்சல் அலுவலக ஊழியர்களுக்கான தேர்வில் 16 இடங்களை ஹரியானா மாநிலத்தவர்களே பிடித்துள்ளனர். தமிழ் மொழித் தாளை கொண்ட அந்த தேர்வில், 25-க்கு 24 மதிப்பெண்களை ஹரியானா மாநிலத்தவர்கள் பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அவர்களது விண்ணப்பங்களை இணையதளத்தில் ஆய்வு செய்த போது, அவர்களது இமெயில் முகவரிகள் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களுடைய புகைப்படங்களும், கையெழுத்துகளும் போலியானது எனவும் சந்தேகம் எழுந்துள்ளது. சென்னையைப் போன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற மோசடி நிகழ்ந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இதனிடையே, மதுரை மண்டலத்தில் நடைபெற்ற மோசடி குறித்து அப்பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவரான நந்தகுமார் கூறும்போது, தேர்வில் ஒருவர் ஒரு மொபைல் எண்ணை மட்டுமே பதிவு செய்ய முடியும். தேர்வு தொடர்பான அனைத்து தகவல்களும் அந்த எண்ணுக்குத் தான் குறுஞ்செய்தி வரும். அப்படியிருக்க, 4 பேர் ஒரு மொபைல் எண்ணில் பதிவு செய்துள்ளனர். இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை. மேலும் மின்னஞ்சலும் போலியாகவே உள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு வேலைக்கு செல்லாமல் கிட்டத்தட்ட ஆறு, ஏழு மாதங்களாகப் படித்திருக்கிறோம். அப்படியிருக்க, இப்படி தேர்வில் மோசடி நடந்துள்ளதாக வருத்தத்துடன் கூறியுள்ளார். வடமாநிலத்தவர்களின் மோசடியால் தமிழக மாணவர்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.