உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்

அரசியல் குழப்பம் நிலவி வந்த உத்தரகாண்ட் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துமாறு ஆளுநர் அளித்திருந்த பரிந்துரை குறித்து டெல்லியில் நேற்றிரவு நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் அவசரக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் பங்கேற்பதற்காக, அசாமில் மேற்கொண்டிருந்த தேர்தல் சுற்றுப்பயணத்தை அவசரமாக முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி டெல்லி திரும்பினார்.

அந்தக் கூட்டத்தில், உத்தரகாண்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பிரணாப் முகர்ஜியிடம் பரிந்துரை செய்வது என முடிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை நள்ளிரவில் சந்தித்து உத்தரகாண்ட் நிலவரம் குறித்து எடுத்துரைத்தார். அதன்பிறகு, அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை கொண்டுவர பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து உத்தரகாண்ட் சட்டப்பேரவை முடக்கி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.