செய்திகள் உண்மை உடனுக்குடன்

இமாச்சலப்பிரதேசத்திற்கும் பரவியது உத்தராகண்ட் மாநில காட்டுத்‌ தீ: அணைக்கும் பணி தீவிரம்

Uttarkhand fire fb

உத்தராகண்டின் நைனிடாலையொட்டிய வனப்பகுதியில் புதிதாக காட்டுத் தீ பரவத் தொடங்கியுள்ளது. காட்டுத் தீ விவகாரம் தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உத்தராகண்ட் மாநிலத்தின், வனப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்கும் பணியில் 6 ஆயிரத்திற்கும் அதிகமான, விமான படை மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். எம்ஐ-17 ஹெலிகாப்டர்கள் மூலம், கொப்பரை போன்ற வடிவிலான கலனில் தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்டு, தீயை அணைக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது.

சூரிய மறைவுக்கு பின்னர் ஹெலிகாப்டர்களை இயக்குவதில் சிரமம் ஏற்படும் என்பதால், இடைவிடாது தீயணைப்பு பணிகள் தொடர்கின்றன. 3 ஆயிரம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில், பற்றியெரிந்த காட்டுத் தீயில், விலையுயர்ந்த மரங்களும், அரியவகை தாவரங்கள், மூலிகைச் செடிகளும் எரிந்து நாசமாகியுள்ளன.

செயற்கைகோள்கள் மூலம், காட்டுத் தீ பரவும் இடங்கள் குறித்து அறியவும், புதிதாக தீப்பற்றும் இடங்களை தெரிந்துகொள்ளவும் ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கிடையே, சுற்றுலா தளமாக விளங்கும் நைனிடால் அருகே, ராம்கார் வனப்பகுதியில், புதிதாக காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. காற்றில் வேகமாக பரவி வரும், தீயை அணைக்கும் பணியும் ஆரம்பமாகியுள்ளது.

இதனிடையே, உத்ரகாண்ட் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களான ஹிமாச்சல் பிரதேசம், ஜம்மு-காஷ்மீரின் ரஜோவ்ரி பகுதிகளில் பரவும் காட்டுத் தீ குறித்து, மக்களவையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காட்டுத் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நாடாளுமன்றத்திற்கு வெளியே பேசிய மத்திய சுற்றுச்சுழல்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், உத்ரகாண்ட் காட்டுத் தீ பிரச்னை தொடர்பாக, 4 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.