செய்திகள் உண்மை உடனுக்குடன்

மூளைச்சாவு அடைந்த மாணவனின் இதயத்தை பெண்ணுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை

Heart-transplant

விபத்தில் மூளைச்சாவு அடைந்த மாணவனின் இதயத்தை ஏர் ஆம்புலன்ஸ் மூலமாக கொச்சிக்கு கொண்டு சென்று அங்கு இதய சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு வெற்றிகரமாக பொருத்தி டாக்டர்கள் சாதனை படைத்து உள்ளனர்.

திருவனந்தபுரம் மாவட்டம் கோரணி என்ற இடத்தை சேர்ந்தவர் சதீசன். இவருடைய மகன் விஷால்(15) கடந்த 16–ந் தேதி பள்ளி சென்று திரும்பும் வழியில் கார் மோதி படுகாயம் அடைந்தார். டாக்டர்கள் பரிசோதித்து மாணவன் மூளைச்சாவு அடைந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அவனது உடல் உறுப்புகளை தானமாக கொடுக்க அவன் பெற்றோர்கள் முன் வந்தனர். விஷாலின் இதயத்தை கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒரு பெண்ணுக்கு பொருத்த முடிவு செய்யப்பட்டது.

அதன் அடிப்படையில் கொச்சி தனியார் மருத்துவமனையில் இருந்து வந்த இதய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜோஸ் சாக்கோ தலைமையில் மாணவனின் உடலில் இருந்து இதயத்தை பிரித்து எடுத்த டாக்டர்கள் பாதுகாப்பான பெட்டியில் வைத்து கார் மூலம் விமான நிலையம் கொண்டு சென்று அங்கிருந்து ஏர் ஆம்புலன்ஸ் மூலம் பிற்பகல் 3 மணிக்கு கொச்சி கொண்டு செல்லப்பட்டது. தொடர்ந்து கொச்சி மருத்துவமனையில் நடந்த இதய அறுவை மாற்று சிகிச்சை மூலமாக மாணவனின் இதயம் அந்த பெண்ணுக்கு பொருத்தப்பட்டது.

3 மணி நேரம் நடைபெற்ற இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு பின் அந்த பெண் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். மாணவனின் கல்லீரல், சிறுநீரகம் ஆகியவையும் தானம் செய்யப்பட்டு உள்ளது. கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனையிலும், சிறுநீரகம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் ஒப்படைக்கப்பட்டது. இதய மாற்று அறுவை சிகிச்சைக்கு ஏர் ஆம்புலன்ஸ் வசதியினை செய்து கொடுத்த கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு பெண் வீட்டார் நன்றி தெரிவித்தனர்.