செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு: மாறன் சகோதரர்களுக்கு முன்ஜாமீன் தர சிபிஐ எதிர்ப்பு

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு முன்ஜாமீன் தர சி.பி.ஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கு, டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தயாநிதி மாறன், கலாநிதி மாறன், அவரது மனைவி காவிரி கலாநிதி உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.

சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், குற்றம்சாட்டப்பட்டோருக்கு முன்ஜாமீன் வழங்க‌ எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், அதற்கான காரணங்களை தெரிவிக்க அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

அப்போது, மாறன் சகோதரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த நீதிமன்றம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்டதாகவும், இதில் ஏர்செல் - மேக்சிஸ் வழக்கை விசாரிக்க‌ கூடாது என்றும் தெரிவித்தார். இதற்கு சி.பி.ஐ, அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட போதும், நீதிபதி சைனி மாறன் தரப்பு கோரிக்கையை முதலில் விசாரிப்பதாக தெரிவித்தார்.

அதன்படி முன்ஜாமீன் மனு விசாரணை, வழக்கை இரண்டாக பிரிப்பது, சி.பி.ஐ, அமலாக்கத்துறை விசாரணை எப்போது தொடங்குவது என்பது போன்றவற்றை ஒத்திவைத்துவிட்டு, இந்த நீதிமன்றத்திற்கு ஏர்செல் மேக்சிஸ் வழக்கை விசாரிக்க உரிமை உள்ளதா என்று விசாரிக்கப்பட்டது.

இது தொடர்பாக மாறன் தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களை சரிபார்த்த நீதிபதி, செப்டம்பர் 6-ஆம் தேதி இதுகுறித்து முடிவு செய்யப்படும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்தார்.