செய்திகள் உண்மை உடனுக்குடன்

டெல்லியில் தொடரும் பனிமூட்டம்.. ரயில், விமான சேவைகள் கடும் பாதிப்பு

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. இதானல் ரயில், விமானம் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக இன்று தலைநகர் டெல்லிக்கு ‌53 ரயில்கள் தாமதமாக வர இருக்கின்றன. 23 ரயில்களின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. 13 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 5 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 7 விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

பனிமூட்டத்தால் நிலவும் குளிர் காரணமாக காலை 10 மணி வரையிலும் சாலைகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. குளிரால் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனிடையே வரும் 18-ஆம் தேதிவரை பனிமூட்டம் தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.