செய்திகள் உண்மை உடனுக்குடன்

வானொலி நிகழ்ச்சியில் பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்... காங்கிரஸ் வலியுறுத்தல்

அகில இந்திய வானொலி நிகழ்ச்சிகளில் எதிர்க்கட்சிகளுக்கும் பேச வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச வாய்ப்பளிப்பதன் மூலம் அதிகாரத்தை பிரசார் பாரதி அமைப்பு தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியில் செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, மாதந்தோறும் உரையாற்ற பிரதமர் மோடிக்கு வாய்ப்பளிக்கும் வானொலி, எதிர்க்கட்சித் தலைவர்களுக்கும் அளிக்க வேண்டியது அவசியம் எனத் தெரிவித்தார். நாடாளுமன்றத்தின் தனிப்பட்ட சட்டத்தின்கீழ் செயல்படும் பிரசார் பாரதி, அனைவருக்கும் பொதுவான ஊடகம் என்ற ம‌ணிஷ் திவாரி, அது அரசின் கருவியல்ல என்றும் தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக வானொலியில் பிரதமர் பேசி வருவது, பிரசார் பாரதி சட்டத்தை மீறுவதாகும் என்ற அவர், கேள்விகளை எதிர்கொள்வதைத் தவிர்க்க ஊடகங்களை ஒருபோதும் சந்திக்காத பிரதமர், அவர் பேசுவதை மற்றவர்கள்‌ கேட்க மட்டுமே விரும்புவதாகவும் புகார் தெரிவித்தார். மன் கி பாத் என்ற மனதின் குரல் நிகழ்ச்சி வாயிலாக கடந்த இரண்டரை ஆண்டுகளாக பிரதமர் மோடி மாதந்தோறும் வானொலியில் பேசி வரும் நிலையில், ‌இப்போது அதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.