காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால்தான் நல்ல காலம் வரும்: ராகுல் காந்தி

பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடு ‌16 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தான் நல்ல காலம் வரும் எனவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார்.

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்கு எதிராக, தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற “ஜன்வேதனா” நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல்காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய ராகுல்காந்தி இந்திய ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மற்றும் நீதித்துறை போன்றவற்றை பாரதிய ஜனதா அழித்துள்ளதாக தெரிவித்தார். பண மதிப்பு நீக்க நடவடிக்கையால், நாடு ‌16 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.இந்தியாவில் எப்பொழுது நல்ல காலம் வரும் என்று மக்கள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாகவும் வரும் 2019 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது தான் நல்ல காலம் வரும் என்றும் ராகுல் தெரிவித்தார். மேலும் தூய்மை இந்தியா, இந்தியாவில் உருவாக்குவோம், திறன்மிகு இந்தியா எனப் பல பெயர்களில் பிரதமர் மோடி நாடகங்களை நடத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.