நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் வாரண்ட்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஊழல் புகார் கூறிய விவகாரத்தில், கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் தமிழ‌கத்தைச் சேர்ந்த நீதிபதி கர்ணனுக்கு, உச்சநீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியபோது, அப்போதிருந்த தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உள்ளிட்ட நீதிபதிகள் மீது, கர்ணன் ஊழல் முறைகேடு புகார்கள் தெரிவித்து, பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.

நீதிபதி கர்ணன் பிரதமருக்கு கடிதம் எழுதியதை நீதிமன்ற அவமதிப்பாக கருதிய உச்சநீதிமன்றம், இதைத் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன், விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏற்கனவே 2 முறை உத்தரவிட்டும் நீதிபதி கர்ணன் நேரில் ஆஜராகாததால், பிணை வாரண்ட் பிறப்பித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். இந்த வாரண்ட் உத்தரவை, கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனிடம், மேற்குவங்க மாநில டிஜிபி வழங்கவும் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும், வரும் 31-ஆம் தேதிக்குள் கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் 7 நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.