ரூ. 14 கோடி இழப்பீடு கேட்டு நீதிபதி கர்ணன் கடிதம்

Karnan l

தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு, நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்க மாநில உயர் நீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் சி.எஸ்.கர்ணன், தமிழகத்தைச் சேர்ந்த இவர், சென்னை உயர்நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி, மற்றும் பல நீதிபதிகள் மீது குற்றச்சாட்டுகளை கூறி, பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்பட பலருக்கு கடிதம் எழுதினார். இதனால், அவர் மீது உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஜே. செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி. லோகுர், பினாகி சந்திர கோஷ், குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. இந்த வழக்கில் பிப்ரவரி 13–ம் தேதி நேரில் ஆஜராகுமாறு நீதிபதி கர்ணனுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அவர் ஆஜராகவில்லை. பின்னர் மார்ச் 10–ந் தேதி ஆஜராகும்படி உத்தரவிட்டது. அன்றும் ஆஜராகாததால், அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆனால், நீதிபதி கர்ணன் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட 7 நீதிபதிகள் மற்றும் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்கி மீது வழக்குப் பதிவு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிபிஐ-க்கு உத்தரவிட்டுள்ளார். அவரது நடவடிக்கை நீதித்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தனக்கு மன உளைச்சல் ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட அரசியல் சாசன அமர்வுக்கு நீதிபதி கர்ணன் கடிதம் எழுதியுள்ளார். அதில், ரூ.14 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.