உத்தரகாண்ட் முதலமைச்சராக பதவியேற்கிறார் திரிவேந்திர சிங் ராவத்

உத்தரகாண்ட்டில், திரிவேந்திர சிங் ராவத் தலைமையிலான பார‌திய ஜனதா அரசு இன்று பதவியேற்கிறது.

70 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 57 இடங்களில் வென்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்தது. இதனையடுத்து மாநில பாஜக எம்எல்ஏக்கள் கூட்டம் டேராடூனில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரிவேந்திர சிங் ராவத் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டார். அவர் இன்று மாலை முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார்.

டேராடூனில் நடைபெறும் விழாவில் முதலமைச்சருக்கும், அமைச்சர்களுக்கும் ஆளுநர் கே.கே.பால் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைக்கிறார். விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பாரதிய ஜனதா தலைவர் அமித் ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

இதனிடையே, புதிய அமைச்சரவையில் எத்தனை பேர் இடம்பெறுவார்கள் என்பது பற்றிய தகவல் இதுவரை தெரியவில்லை. எம்எல்ஏக்களில் பலர் புதியவர்கள் என்பதாலும், அவர்களில் பலர் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பதாலும் அமைச்சரவையை இறுதி செய்வது, முதலமைச்சர் ராவத்துக்குப் பெரும் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.