செய்திகள் உண்மை உடனுக்குடன்

விசாரணை வளையத்தில் கார்த்திக்: அரசியல் பழிவாங்கலா?

Karthi

இந்தியாவின் கைதேர்ந்த அரசியல்வாதியான ப.சிதம்பரத்தின் மகனான கார்த்திக் சிதம்பரம் தற்போது அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் சிக்கி உள்ளார்.

ஒரு பாதி தொழிலதிபர். மறுபாதி அரசியல்வாதி. 45 வயதான கார்த்தி சிதம்பரம் தற்போது இரண்டு முக்கிய வழக்குகளின் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். வாசன் ஹெல்த் கேர் நிறுவனம் தொடர்பான ரூ.2,262 கோடி அந்நிய செலாவணி மோசடி வழக்கு இவற்றில் ஒன்று. மற்றொன்று, ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் பெற்ற அந்நிய முதலீட்டை குறைத்துக் காண்பிப்பதற்கு கார்த்தி சிதம்பரம் உதவியதாக குற்றம்சாட்டப்படும் வழக்கு. வாசன் ஹெல்த் கேர் வழக்கில் அமலாக்கத்துறையின் விசாரணையையும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணையையும் எதிர்கொண்டுவருகிறார் கார்த்திக் சிதம்பரம்.

இது தன்மீதான அரசியல்பழிவாங்கலுக்காக போடப்பட்ட வழக்கு பதிவு என அவர் கூறுகிறார். வழக்கு, சோதனை, விசாரணை ஆகிய நடவடிக்கைகளுக்கு அரசியல் சாயம் பூசப்படுவது இப்போது சர்வசாதாரணமாகிவிட்டதாக மூத்த சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள். ஆனால், உரிய ஆதாரங்கள் இல்லாமல் மத்திய புலனாய்வு அமைப்புகள் நடவடிக்கைகளை எடுப்பதில்லை என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இந்தியாவின் கைதேர்ந்த அரசியல்வாதியான ப.சிதம்பரத்தின் மகனுக்கு இப்போது சோதனையான காலம். அரசியல் சதுரங்கத்தில் கார்த்திக் சுயமாக காய்களை நகர்த்துவதற்கான நெருக்கடியை இந்தச் சூழல் அவருக்கு ஏற்படுத்தி உள்ளது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.