அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிப்பு; புதிய அமைச்சராக மாஃபா பாண்டியராஜன் நியமனம்

பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டுள்ளார். அந்த இலாக்கா அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் கூடுதலாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனிடையே பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்சமினுக்கு ஊரக தொழில்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் புதிதாக மாஃபா கே. பாண்டியராஜன் அமைச்சராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

முன்பு தேமுதிகவில் இருந்த மாஃபா கே. பாண்டியராஜன், கடந்த ஆட்சியில் அதிமுக அனுதாபியாக மாறினார். பின்னர் அதிமுகவில் இணைந்ததுடன், அக்கட்சியின் சார்பில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஆவடி சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். நாளை ஆளுநர் மாளிகையில் பதவி பிரமாணம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.