செய்திகள் உண்மை உடனுக்குடன்

பெண்கள் பாதுகாப்புக்காக ஆன்லைன் பெட்டிஷனை முன்னெடுத்த சின்மயி

Chinmayi

ட்விட்டரில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக இணையதள கையெழுத்து இயக்கத்தினை பாடகி சின்மயி முன்னெடுத்துள்ளார்.

ட்விட்டரில் பெண்களுக்கு பாலியல்ரீதியான எச்சரிக்கை விடுக்கும் கணக்குகள் முடக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சேஞ்ச்.ஓஆர்ஜி (change.org) இணையதளம் வாயிலாக கையெழுத்து இயக்கத்தினை அவர் தொடங்கியுள்ளார். தீவிரவாதம் தொடர்புடையதாக 3,60,000 சமூகவலைதள கணக்குகள் கடந்த 2015ல் முடக்கப்பட்டதாக சின்மயி குறிப்பிட்டுள்ளார். அது சாத்தியம் எனில், பெண்களுக்கு எதிரான வன்முறையைத் தூண்டும் வகையில் எச்சரிக்கை விடுக்கும் கணக்குகள் ஏன் முடக்கப்படக் கூடாது என்ற கேள்வியையும் அந்த ஆன்லைன் பெட்டிஷன் வாயிலாக அவர் எழுப்பியுள்ளார். பெண்களுக்கு பாலியல்ரீதியான எச்சரிக்கைகளை விடுக்கும் வகையிலான பதிவுகளுடன் கூடிய கணக்குகளை முடக்கக் கோரி ட்விட்டர் நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டதாகக் கூறியுள்ள சின்மயி, அந்த விவகாரத்தில் காவல்துறை வழக்கு பதிவு செய்தால் மட்டுமே அதுபோன்ற நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று பதில் வந்ததாகத் தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்கள் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இருக்கும் வகையில் இந்த நடவடிக்கையை ட்விட்டர் நிர்வாகம் எடுக்க வேண்டும் என்றும் சின்மயி வலியுறுத்தி உள்ளார். ஆன்லைன் பெட்டிஷன் தொடங்கப்பட்டு 36 மணி நேரத்துக்குள் 41,000-த்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கை மனு ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சிக்கு அனுப்பப்பட உள்ளதாக அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.