செய்திகள் உண்மை உடனுக்குடன்

மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் தொடர்: இன்னிங்ஸ் வெற்றியுடன் தொடங்கிய இந்தியா

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

ஆண்டிகுவாவில் நடைபெற்ற இந்த போட்டியில், 323 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோஆன் பெற்று இரண்டாவது இன்னிங்ஸை மேற்கிந்தியத் தீவுகள் அணி தொடர்ந்தது. மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 2‌1 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, நான்காம் நாள் ஆட்டத்தை நேற்று தொடர்ந்து விளையாடியது. அஸ்வின் சுழற்பந்து வீச்சில் அந்த அணி வீரர்கள் ரன் குவிக்க திணறினர். அதிகபட்சமாக சாமுவேல்ஸ் 50 ரன்களும், கார்லஸ் பிரத்வெயிட் 51 ரன்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். முடிவில் 78 ஓவர்களில் 231 ரன்களுக்கு மேற்கிந்தியத் தீவுகள் அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது.

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அபாரமாக பந்துவீசி 83 ரன்கள் விட்டுக் கொடுத்து 7 விக்கெட்களை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட அஸ்வின் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.