செய்திகள் உண்மை உடனுக்குடன்

கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் விவசாயிகள் மறியல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் போராட்டத்தில் ஈடுபட்ட தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களை அருகில் உள்ள திருமண மண்டபத்தில் காவல் துறையினர் அடைத்து வைத்துள்ளனர். விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தினர் டெல்லியில் பிரதமரை சந்தித்து மனு அளிக்க சென்றனர்.

அனுமதி கிடைக்காததால் பிரதமர் வீட்டின் முன் போராட்டம் நடத்த முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர், சென்னை வந்த அவர்கள், சென்ட்ரல் ரயில் நிலையத்தின், 4-வது நடைமேடையில் கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய கடனை ரத்து செய்ய வேண்டும், கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகளின் குடும்பத்திற்கு நிதி உதவி அளிக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.