செய்திகள் உண்மை உடனுக்குடன்

சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைக்குமா?.. தீர்ப்பு 30ம் தேதிக்கு ஒத்திவைப்பு

சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்ட 5 பேரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.131 கோடி ரொக்கமும், 171 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து சேகர் ரெட்டி மற்றும் அவரது சகாவான சீனிவாசலு ஆகியோர் மீது 3 பிரிவுகளின் கீழ் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை ஜனவரி 3ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட தினத்தன்றே ஜாமீன் கோரி சேகர் ரெட்டி மற்றும் சீனிவாசலு தரப்பில் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

விசாரணையின் போது, பணப்பரிமாற்ற வழக்கில் 5 பேரும் கூட்டு சதியில் ஈடுபட்டிருப்பதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது. குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும்‌, விசாரணைக்கு ஒத்துழைப்பதால் ஜாமீன் வழங்க வேண்டும் என்பது சேகர் ரெட்டி தரப்பு வழக்கறிஞரின் வாதம். இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, சேகர் ரெட்டி உள்ளிட்டோரின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பையும், 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சிபிஐ அனுமதி கோரிய மனு மீதான தீர்ப்பையும் வரும் 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.