கைவிட்ட வடகிழக்கு பருவமழை... வறண்டு கிடக்கும் அணைகள்

வடகிழக்கு பருவமழையை பெரிதும் நம்பியிருந்த நிலையில், எதிர்ப்பார்த்த அளவு மழையில்லாததால் 15 முக்கிய அணைகளில் கடந்தாண்டை விட இந்தாண்டு நீர்மட்டம் முழுவதும் குறைந்து விட்டது.டெல்டா மாவட்ட விசாயிகள் பெரிதும் நம்பியுள்ள மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்தாண்டு 92 புள்ளி 65 அடியாக இருந்தது. ஆனால், இந்தாண்டு 37 புள்ளி 10 அடியாக மட்டுமே உள்ளது.

105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 45 புள்ளி 81 அடியாகவும், அமராவதி அணையின் நீர்மட்டம் 39 புள்ளி 08 அடியாகவும் நீர்மட்டம் குறைந்துவிட்டது.

வைகை அணையின் நீர்மட்டம் 25 புள்ளி 33 அடியாக உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் 27 புள்ளி 25 அடிக்கும் மட்டுமே தற்போது தண்ணீர் உள்ளது. தென்மாவட்டங்களில் எதிர்ப்பார்த்த அளவு மழை பெய்யாததால் மணிமுத்தாறு அணையில் 36 புள்ளி 59 அடியும், பேச்சிப்பாறையில் 8 புள்ளி 10 அடியாகவும் நீர் இருப்பு உள்ளது.

பெருஞ்சாணி அணையில் 33 புள்ளி 35 அடியும் சாத்தனூர் அணையில் 91 புள்ளி 40 அடி நீரும் உள்ளது.

சோலையாறு அணையின் நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டது. 160 அடி கொண்ட அணையில் தற்போது வெறும் 4 புள்ளி 26அடிக்கு மட்டுமே தண்ணீருள்ளது.

பரம்பிக்குளம் அணையில் 16 புள்ளி 56 அடியும், ஆழியாறு அணையில் 63 புள்ளி 05 அடி தண்ணீரும் மட்டுமே உள்ளது. இதனால், விவசாயம் மட்டுமின்றி குடிநீருக்கும் போதுமான தண்ணீர் இருக்குமா என்ற ஐயம் தற்போது எழுந்துள்ளது.