செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜல்லிக்கட்டுக்கு மட்டும் உச்சநீதிமன்றத்தை காட்டுவதா... மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு

காவிரி பிரச்னையில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற முடியாது என்று கூறிய மத்திய அரசு ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகக் கூறுவது அது இரட்டை வேடம் போடுவதைக் காட்டுகிறது என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஜல்லிக்கட்டி போட்டிகளை நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதாக தெரிவித்தார்.

காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களில் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் கூட, அதனை நிறைவேற்றாமல் உச்சநீதிமன்றம் உத்தரவிட உரிமை கிடையாது என மத்திய அரசு தெரிவித்ததை ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மட்டும் உச்சநீதிமன்ற உத்தரவிற்காக காத்திருக்கிறோம் என மத்திய அரசு கூறுவது இவ்விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுவதை காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.