ஜல்லிக்கட்டுக்கு இரவு பகலாக தொடரும் போராட்டம்

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் மாநிலம் முழுவதும் வீதியில் திரண்டுள்ளனர். ஜல்லிக்கட்டு நடத்தியே தீர வேண்டும் என்ற உறுதியான கோரிக்கையில் இருக்கும் அவர்கள், இரவு பகலாக போராட்டத்தை முன்னெடுத்துச் செல்கின்றனர்.

சென்னை மெரினா கடற்கரையில் திரண்டுள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள், நேற்று காலை முதல் போராட்டத்தை தொடர்ந்‌து வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில், 3ஆவது நாளாக போராட்டம் நடத்தி வரும் பொதுமக்கள், ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அழுத்தமாக பதிவு செய்கின்றனர்.

நெல்லை மாவட்டம் வ.உ.சி மைதானத்தில் திரண்டுள்ள பொதுமக்கள், ஜல்லிக்கட்டுக்காக நேற்று காலை முதல் முழக்கங்கள் எழுப்பி வருகின்றனர். கோவை வ.உ.சி திடல், திண்டுக்கல் கல்லறைத் தோட்‌டத்திலும் 20 மணி நேரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி ஏ.எஃப்.டி திடலில் நேற்று மாலை திரண்ட இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.