செய்திகள் உண்மை உடனுக்குடன்

விபத்துக்குள்ளான கப்பல்கள் சிறைபிடிப்பு

எண்ணூர் அருகே விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் கடலோர காவல் படை சிறைபிடித்துள்ளது.

எண்ணூர் துறைமுகம் அருகே இரு கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கச்சா எண்ணெய் ஏற்றி வந்த கப்பல் சேதமடைந்து அதில் இருந்த கச்சா எண்ணெய் வெளியேறி கடலில் கலந்து பெருமளவிலான மாசுவை ஏற்படுத்தி உள்ளது. கப்பலில் இருந்து வெளியேறிய எண்ணெய், எண்ணூர், மெரினா, எலியட்ஸ் கடற்கரையோரங்களில் படலமாக மிதக்கிறது.

இந்நிலையில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களையும் சிறைப்பிடிக்கக் கோரி மீனவர் நலச்சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. கப்பலில் இருந்து எண்ணெய் வெளியேறியதால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் கூறியிருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியது. இதையடுத்து, விபத்துக்குள்ளான இரண்டு கப்பல்களையும் கடலோரக் காவல்படை சிறைப்பிடித்துள்ளது. பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை கப்பல்கள் விடுவிக்கப்படமாட்டாது என்று கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.