டி.டி.வி.தினகரன் அடக்கமானவர்: எம்எல்ஏ சரோஜா

அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் தனியார் சொகுசு விடுதியில் தங்கியுள்ள அதிமுக பெண் எம்எல்ஏக்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் சட்டம் குறித்து நன்கு அறிந்தவர் என்றும், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார் என்று காத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.

அதிமுக துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டி.டி.வி. தினகரன் குறித்து கருத்துத் தெரிவித்த ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சரோஜா, துணை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தினகரன் அமைதியானவர், அடக்கமானவர் என தெரிவித்தார். தினகரன் கட்சிக்கு புதிதானவர் அல்ல என்றும் அவருக்கு திடீரென பொறுப்பு கொடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். இதற்கு முன்பே அதிமுக மாநில பேரவை செயலாளராகவும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினராகவும் தினகரன் இருந்துள்ளார் எனவும் சரோஜா கூறினார்.