தமிழகத்தில் மத்திய அரசு ஆதாயம் தேட முயற்சித்தது... திருநாவுக்கரசர் குற்றச்சாட்டு

Thirunavukkarasar fb

தமிழகத்தில் நிலவிய நிலைத்தன்மையற்ற அரசியல் சூழலை பயன்படுத்தி மத்திய அரசு ஆதாயம் தேட முயற்சித்ததாக மாநில காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதற்காக மத்திய அரசு குறுக்கு வழியில் செயல்பட்டதாகவும் விமர்சித்துள்ளார்.

மதுரையில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக மதுரை விமானநிலையம் வந்த காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசியவர், மோடி தலைமையிலான மத்திய அரசு ஜனாதிபதி தேர்தலில் தங்களுக்கு சாதகமாக நடந்து கொள்ள தமிழகத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உதவியுடன் குழப்பிய குட்டையில் மீன் பிடிக்க பார்த்ததாகவும் , ஆனால் அது முடியவில்லையெனவும் , தற்போது தான் ஆளுநர் கை அவிழ்த்துவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். பழனிச்சாமி சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிருபிப்பார் எனவும் தெரிவித்தார்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மீது தாக்குதல் தொடர்பான கேள்விக்கு வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டார். மேலும் பேசியவர் தமிழ்நாட்டின் அரசியல் குழப்பம் ஆளுநரின் நடவடிக்கை காலம் கடந்தாலும் தீர்வு பெற்றுள்ளது. மத்திய அரசு குறுக்கு வழியில் ஒரு அரசை நியமிக்க முயற்சித்தது. சட்டப்படியான காரியம் நிறைவேறியுள்ளது. ஊழல் இல்லாத , சட்ட ஒழுங்கு பாதிப்பில்லாமல் பழனிச்சாமி தலைமையிலான அரசு நான்கு ஆண்டுகள் செயல்பட வேண்டும். எம்.எல்.ஏ மீண்டும் கூவத்தூர் சென்றது அவர்களது உரிமை , அவர்களது விருப்பம். பழனிச்சாமி தலைமையிலான அரசு நான்கு ஆண்டுகள் தொடரும் என திருநாவுக்கரசர் தெரிவித்தார்.