தமிழகத்தில் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது: ஸ்டாலின்

தமிழகத்தில் தற்போது நடப்பது சசிகலாவின் பினாமி ஆட்சி அதனை அகற்ற வரும் 22 ஆம் தேதி திமுக நடத்தவிருக்கும் போராட்டத்தில் பொதுமக்கள், இளைஞர்களுக்கு அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசியவர், ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து முறையாக அறிக்கை தரவில்லை, அவரது மரணம் குறித்து கூட குழப்பமான தகவல்கள் அளிக்கப்பட்டது என குற்றம்சாட்டினார். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு மெரினாவில் செய்தியாளர்களிடம் பன்னீர்செல்வம் தெரிவித்தார் எனவும் அவரது மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்க உத்தரவிடுவதாக அவர் கூறியதையும் ஸ்டாலின் குறிப்பிட்டார். தமிழகத்தில் கடந்த 9 மாத காலமாக அதிமுக அரசு செயல்படவில்லை. அதிமுக அரசின் அறிவிப்புகள் வெற்று அறிவிப்புகளாகவே இருக்கின்றன. கூவத்தூர் தனியார் விடுதியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பிணைக்கைதிகள் போல வைக்கப்பட்டிருந்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த திமுக கோரியது. சபாநாயகர் சபை மரபை கடைப்பிடிக்கவில்லை. ரகசிய வாக்கெடுப்பு நடத்தியிருந்தால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு தோற்றிருக்கும் என ஸ்டாலின் கூறினார். சட்டசபையில் அவைக் காவலர் உடையில் இருந்த மூத்த காவல் அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டோம் என அவர் கூறினார். சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தை காப்பாற்ற உடனடியாக அறப்போரட்டத்தை நடத்த வேண்டும் எனவும் சட்ட ரீதியாகவும், போராட்டமாகவும் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என ஸ்டாலின் கூறினார். அதிமுக அரசின் மீது மக்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர். தமிழகத்தில் தற்போது நடப்பது சசிகலாவின் பினாமி ஆட்சி என ஸ்டாலின் விமர்சித்தார். தற்போது நடைபெறும் ஆட்சி நீடிக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது என்றார்.