செய்திகள் உண்மை உடனுக்குடன்

தியாகத் தாய் சசிகலாவுக்கு நன்றி: டிடிவி தினகரன்

Dhinakaran

ஆர்.கே.நகரில் போட்டியிட வாய்ப்பளித்த தியாகத் தாய் சசிகலாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என அதிமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஏப்ரல் 12ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், அதிமுக சார்பில் தினகரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெயலலிதா நிறைவேற்ற எண்ணியிருந்த நலத்திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்த இருப்பதாகக் கூறினார். திமுகவை மட்டுமே எதிர்கட்சியாக நினைப்பதாகக் குறிப்பிட்ட தினகரன், மற்ற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தம்மை ஆதரிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றாலும் முதலமைச்சராகும் எண்ணமில்லை என்றும் தினகரன் கூறினார். ஜெயலலிதா போட்டியிட்ட தொகுதியில் போட்டியிடுவதைப் பெருமையாகக் கருதுவதாகக் கூறிய தினகரன், மக்களின் ஆதரவுடன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்றும் தெரிவித்தார். ஆர்.கே.நகரில் போட்டியிட தன்னை தேர்வு செய்த தியாகத்தாய் சசிகலாவுக்கும், ஆட்சி மன்றக் குழுவுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தினகரன் கூறினார். மக்களை ஏமாற்றிவரும் ஓ.பன்னீர்செல்வத்தினை பதவிக்காக சிலர் ஆதரிக்கின்றனர் என அவர் விமர்சித்தார்.