வாட்ஸ்அப்பில் ஸ்மைலி பதிவிட்டதால் வழக்கு: விசாரிக்க நீதிமன்றம் தடை

பிஎஸ்என்எல் பெண் அதிகாரியின் வாட்ஸ்அப்பில் ஸ்மைலி பதிவிட்டதற்காக, தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது.

தூத்துக்குடி பிஎஸ்என்எல் அதிகாரிகள், அலுவலக தகவல் தொடர்பிற்காக வாட்ஸ்அப் குழு ஒன்றை உருவாக்கியுள்ளனர். தூத்துக்குடி வட்டத்தில் பணிபுரியும் அதிகாரி விஜயலெட்சுமி என்பவர், குறைதீர் முகாமில் கலந்து கொண்ட வாடிக்கையாளரின் குறை குறித்த வீடியோ பதிவை அதில் பதிவு செய்துள்ளார்.

குழுவிலிருந்த பிற உறுப்பினர்கள் அதன் பின்னர் தொடர்ச்சியாக ஸ்மைலிகளை பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து விஜயலெட்சுமி, தன்னை கேலி செய்யும் விதமாக, ஊழியர்கள் நடந்து கொண்டனர் என்று தூத்துக்குடி தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினர், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பிஎஸ்என்எல் ஊழியர்கள் 49 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்ட லிங்க பாஸ்கர் உள்ளிட்ட 47 பேர், ஸ்மைலி பதிவிட்டதில் தவறில்லை என்று கூறி வழக்கை ரத்து செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.என்.பிரகாஷ் வழக்கை விசாரிக்க தடை விதித்து உத்தரவிட்டார்.