செய்திகள் உண்மை உடனுக்குடன்

உள்ளாட்சித் தேர்தலை மே.14ம் தேதிக்குள் நடத்த முடியாது: தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை மே 14-ம் தேதிக்குள் நடத்த முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் கடந்த அக்டோபர் மாதத்துடன் உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஆட்சி காலம் முடிவடைந்தது. இதையடுத்து, நவம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஆனால், இடஒதுக்கீடு விவகாரத்தில் குளறுபடி இருப்பதாக திமுக சார்பில் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலுக்கு இடைகால தடை விதித்தது. மேலும் திமுக அளித்துள்ள புகாருக்கு விளக்கம் கேட்டு, தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது.

அதற்கான விளக்கத்தை தேர்தல் ஆணையம் அளித்தது. அதில் போதிய விளக்கம் இல்லை என கூறிய நீதிமன்றம், தேர்தலை நடத்த தடை உத்தரவை நீட்டித்தது. இதற்கிடையில்,சில நாட்களுக்கு முன், மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என, தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தேர்தலுக்கான பணிகளை துவங்க அதிகாரிகள் திட்டமிட்டனர்.

ஆனால், தமிழக அரசு அதற்கான வேலைகளில் ஈடுபடவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில், சமூக ஆர்வலர் பாடம் நாராயணன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஏப்ரல் 24ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார். இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி தேர்தல் ஆணையம் இன்று பதில் மனு தாக்கல் செய்தது. அதில், மே 14ம் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.