சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

ஆர்.கே.நகர் தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 12 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடப் போவதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்தார். ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர் மதுசூதனனுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி, தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் அணி சார்பில் மனு கொடுக்கப்பட்டது. ஓபிஎஸ் அணியின் சார்பில் மனோஜ் பாண்டியன் இந்த மனுவை அளித்துள்ளார். இந்நிலையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்குவது தொடர்பாக பதிலளிக்குமாறு அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சின்னம் ஒதுக்குவது குறித்து சசிகலா மார்ச் 20 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.