செய்திகள் உண்மை உடனுக்குடன்

ஜெயலலிதா மரணம்: விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த டிசம்பர் மாதம் 5ம் தேதி உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக விசாரிக்க மத்திய அரசு விசாரணை குழு அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உள்ளிட்ட மூவர் வழக்கு தொடர்ந்திருந்தனர். இதுதொடர்பாக மத்திய அரசின் சார்பில் மத்திய உள்துறை சார்பு செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணைக் குழுவை, மத்திய அரசால் அமைக்க முடியாது என்றும், மாநில அரசுக்குத்தான் அதற்கான அதிகாரம் இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.