செய்திகள் உண்மை உடனுக்குடன்

விவசாயிகள் போராட்டம் வாபஸ்

டெல்லியில் கடந்த 7 நாட்களாக தமிழக விவசாயிகள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

பயிர்க்கடன் தள்ளுபடி, வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த 7 நாட்களாக டெல்லியில் போராட்டத்தில் நடத்தி வந்தனர். அவர்களுடன் மத்திய வேளாண்துறை பிரதிநிதிகள் கடந்த 16ம் தேதி பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து வறட்சி நிவாரணம் வழங்குவதற்கான உயர்மட்டக் குழுவைக் கூட்டவேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மத்திய வேளாண்துறை அமைச்சர் கடிதம் எழுதினார். இதே போல் விவசாயக் கடன்களை கட்டும்படி நிர்பந்திக்கவேண்டாம் என வங்கிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய நிதிஅமைச்சர் அருண் ஜெட்லிக்கும் ராதா மோகன் சிங் கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து வறட்சி நிவாரணத்திற்கான உயர்மட்டக்குழு வரும் 23ம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே போராட்டம் நடத்திவந்த தமிழக விவசாயிகளுடன் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாயிகளின் பிரச்னை குறித்து மத்திய வேளாண் அமைச்சரிடம் பேசப்படும் எனவும், விவசாயிகள் வேளாண் அமைச்சரை சந்திக்க நேரம் பெற்றுத்தரப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். இதையடுத்து விவசாயிகள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். மேலும், மத்திய அமைச்சரை சந்திக்கும் வரை டெல்லியில் தங்கியிருக்கவும் விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.