திருப்பூரில் ரூ.570 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம்: சிபிஐ பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

திருப்பூரில் 570 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் குறித்து திமுக தொடர்ந்த வழக்கில் 2 வாரங்களுக்குள் பதிலளிக்க சிபிஐக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்த போது, திருப்பூரில் மூன்று கண்டெய்னர் லாரிகளில் எடுத்து செல்லப்பட்ட 570 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து சிபிஐ விசாரணை கோரி திமுக செய்தி தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன், சிபிஐயிடம் மனு அளித்தார்.

இந்த நிலையில், தான் அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அதன் இறுதி அறிக்கையை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கோரி டி கே எஸ் இளங்கோவன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி சுப்பையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது திமுக அளித்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், சிபிஐ விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை குறித்து 2 வாரங்களுக்குள் பதில் அளிக்கவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.