செய்திகள் உண்மை உடனுக்குடன்

சர்வதேச அகதிகள் தின பகிர்வு: உலகம் முழுவதும் அகதிகளாக 6.53 கோடி பேர் இடம்பெயர்வு

Refugee

உலகம் முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் ஆறரை கோடி பேர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர் என ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இதன்படி, உலகின் ஒவ்வொரு 113 பேரிலும் ஒருவர் அகதியாக இருக்கிறார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு இறுதிக்குள் 6 கோடியே 53 லட்சம் பேர் உள்நாட்டிலேயே வேறு இடத்திற்கோ அல்லது வெளிநாடுகளிலே தஞ்சம் அடைந்துள்ளனர்.

இந்த 6 கோடி 53 லட்சம் பேரில் 4 கோடியே 8 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள். மீதமுள்ள 2 கோடி 13 லட்சம் பேர் வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். இவர்களில் பாதிபேர் குழந்தைகள் என்பதும், அதிலும் ஒரு லட்சம் குழந்தைகள் பெற்றோரையும் குடும்பத்தினரையும் இழந்து தனியாக வாடுகின்றனர் என்பதும் தெரிய வந்துள்ளது.

ஐநா அகதிகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, அதிகபட்சமாக இடம் பெயர்ந்தவர்களின் பட்டியலில் பாலஸ்த்தீனம் முதலிடத்தையும், சிரியா இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. அகதிகள் பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வேண்டியது அவசியம் என வலியுறுத்தியுள்ள ஐநா அமைப்பு வளரும் நாடுகளே 86 சதவிகித அகதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.