செய்திகள் உண்மை உடனுக்குடன்

முன்னாள் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்‌ஷே மகனுக்கு ஜாமீன் வழங்க இலங்கை நீதிமன்றம் மறுப்பு

Yoshitha

நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ உட்பட ஐந்து பேர் தாக்கல் செய்த ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில் அவர்களை வரும் 27 ஆம் தேதி வரை காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.அப்போது அவர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த வழக்குடன் தொடர்புடைய விசாரணைகள் முடிவடைந்து விட்டதால், சந்தேக நபர்களை ஜாமீனில் விடுதலை செய்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரங்கள் இருப்பதாக வழக்கறிஞர் வாதாடினார்.

இதற்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய பொலிஸார், தொடந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதால், இவர்களை விடுதலை செய்வதன் மூலம் அதற்கு பாதிப்பு ஏற்படும் என கூறினார்.

இரு தரப்பு வாதங்களையும் ஆராய்ந்த நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரிப்பதாக அறிவித்தார்.

யோஷித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐந்து பேர், நிதி மோசடி விவகாரம் தொடர்பில் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.